கோலாலம்பூர், டிசம்பர் 14 (பெர்னாமா) -- அனைத்துலக காற்பந்து சம்மேளனம் பிஃபாவால் 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட ஹரிமாவ் மலாயா அணியின் விளையாட்டாளர்கள் எழுவர் சம்பந்தப்பட்ட ஆவணப் பிரச்சனை தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ளும் வகையில் மலேசிய காற்பந்து சங்கம் எஃப்.ஏ.எம் அமைத்த சுயாதீனச் செயற்குழுவின் முடிவுகள் இம்மாதம் அறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் தலைமை நீதிபதி துன் எம்டி ரவுஸ் ஷரீப் தலைமையேற்றிருக்கும் அச்செயற்குழுவின் அறிக்கைக்காகத் தமது தரப்பு இன்னும் காத்திருப்பதாகவும் அதன் பின்னரே எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்றும் எஃப்.ஏ.எம்மின் இடைக்காலத் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மஹாடி தெரிவித்தார்.
''துன் ரவுசின் அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். இம்மாதம் அவ்வறிக்கை எங்களுக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அறிக்கையிலிருந்து துன் ரவுஸ் செயற்குழுவின் முடிவுகளைப் பார்ப்போம். அதன் பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பார்ப்போம்'', என்றார் டத்தோ முஹமட் யூசோஃப் மஹாடி.
இன்று கோலாலம்பூரில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணத்துவ மையம் மற்றும் எஃப்.ஏ.எம்முக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)