இந்தியா, டிசம்பர் 15 (பெர்னாமா) -- இந்தியத் தலைநகர் புதுடெல்லியை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு காற்றுத் தூய்மை கேட்டின் அளவு கடந்த சில வாரங்களில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதிகாரிகள் மிகக் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தினர்.
காற்றுத் தூய்மைகேடு மோசமடைந்து வரும் வேளையில் 40-க்கும் மேற்பட்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதோடு பல விமான பயணங்கள் தாமதமாகியுள்ளன.
மேலும், புது டெல்லியிலிருந்து வந்து செல்லும் 50-க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் பல மணி நேரங்கள் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரு தினங்களாக டெல்லியின் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு மிகக் கடுமையான நிலையில் உள்ளதாக மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.
இது ஆரோக்கியமான நபர்களுக்கு சுவாசப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு இதய அல்லது நுரையீரல் நோய்கள் உள்ளவர்களின் உடல்நலத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)