ஷா ஆலம், டிசம்பர் 15 (பெர்னாமா) -- கடந்த டிசம்பர் எட்டாம் தேதி சிலாங்கூர் காஜாங்கில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதில் போதைப்பொருள் விநியோகக் கும்பலின் நடவடிக்கையைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்ததாக டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது மொத்தம் ஒரு கோடியே 4 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர்களில் இருவர் உள்நாட்டு பெண்கள் என்றும் மற்றொருவர் 40 முதல் 45 வயதுடைய வெளிநாட்டு ஆடவர் என்றும் நம்பப்படுகிறது.
இச்சோதனை நடவடிக்கையில் போலீசார் சுமார் இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாப்பூ கொண்டதாக நம்பப்படும் 1,600 சிகரெட்டுகள், 195.50 லிட்டர் அளவிலான எக்ஸ்டஸி திரவம் நிரப்பப்பட்டிருக்கும் 400 பான பெட்டிகள் மற்றும் புட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பிற பொருட்களில், எக்ஸ்டஸி பொடி, கெதாமின் வகை போதைப் பொருள், எக்ஸ்டஸி மாத்திரைகள், ஷாபூ, 5 எராமின் மாத்திரைகள் மற்றும் யாபா மாத்திரைகள் ஆகியவையும் அடங்கும்.
சந்தேக நபர்கள் மூவரும் ஏழு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 39Bஇன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)