பொது

கே.டி.எம்.பி மின்கம்பி களவாடல்; 'கவி' கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது

16/12/2025 05:04 PM

சுங்கைப் பட்டாணி, டிசம்பர் 16 (பெர்னாமா) -- கடந்த வார வியாழக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 'கவி' கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து KERETAPI TANAH MELAYU BERHAD கே.டி.எம்.பி நிறுவனத்திற்குச் சொந்தமான மின்கம்பிகள் திருட்டு நடவடிக்கையைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

27 முதல் 51 வயதிற்குட்பட்ட அந்த அறுவரும் குவாலா மூடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அக்குற்றச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுவதாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

கே.டி.எம்.பிற்குச் சொந்தமான மின்கம்பிகளைத் திருடுவதற்காக அதை வெட்டியதாகவும் அவர்கள் மீது ஐந்து புகார்கள் உள்ளதாக ஏசிபி ஹன்யான் ரம்லான் கூறினார்.

மின்கம்பிகளைத் திருடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களையும் போலீசார் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

அவற்றில் எட்டு கே.டி.எம்.பி மின்கம்பி சுருள்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் ஆகியவை அடங்கும் என்று ஹன்யான் குறிப்பிட்டார்.

கடந்த கால குற்றப் பதிவுகளைச் சரிபார்த்ததில் அனைத்து சந்தேக நபர்களும் போதைப்பொருள் தொடர்பான மற்றும் குற்றவியல் குற்றங்களில் ஈடுபட்டதற்கான பதிவுகளையும் கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிலும் 38 வயதான அக்குழுவின் முக்கிய நபருக்கு 30 குற்றப் பதிவுகள் உள்ளன.

குற்றவியல் தொடர்பில் 12உம் போதைப் பொருள் தொடர்பில் 18 குற்றப் பதிவுகளும் அதில் அடங்கும் என்றும் ஹன்யான் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 379இன் கீழ் தொடர் விசாரணைக்காகக் கடந்த 11ஆம் தேதி தொடங்கி இன்று வரை ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)