பாலிங், டிசம்பர் 17 (பெர்னாமா) -- நேற்று மாலை கெடா பாலிங் அருகே உள்ள மலாவ், கம்போங் பாரு பகை எனும் இடத்தில் தமது பேரனால் தாக்கப்பட்ட 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், இச்சம்பவத்தில் அந்த இளைஞரின் 80 வயது தாயாரும் காயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து நேற்றிரவு மணி 7க்கு தகவல் கிடைத்ததாகப் பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் Supt Brandon Anak Richard Joe தெரிவித்தார்.
21 வயதுடைய அந்த இளைஞரைப் பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் புகாரைப் பெற்ற பிறகு விசாரணைக்கு உதவும் நோக்கில் இரவு மணி 7.50 அளவில் போலீசார் அவரைக் கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது பாட்டியைக் குத்தியதாக ஒப்புக்கொண்ட அந்த இளைஞருக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட அச்சந்தேக நபர் மாற்றுத்திறனாளி என்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு அவர் கோபத்தில் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
பிரதேப் பரிசோதனைக்காக உயிரிழந்த மூதாட்டியின் உடல் அலோர் ஸ்டார் சுல்தானா பாஹியாத மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)