கோலாலம்பூர், 17 டிசம்பர் (பெர்னாமா) -- புது மலர்ச்சி நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்கவும், மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சிகளை முன்னெடுக்கவும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மடானி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றத்தை நேற்று அறிவித்திருந்தார்.
காலியிடங்களை நிரப்புவது, வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் இந்திய சமுதாயத்தின் முழு அமைச்சர் கோரிக்கைக்கு செவி சாய்ப்பது...
ஆகிய மூன்று கோணங்களை முன்வைத்து, இந்த புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது, தமது கண்ணோட்டத்தில் கண்டறிய முடிந்ததாக அரசியல் ஆய்வாளர் முனைவர் ஜி. மணிமாறன் பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.
1986-ஆம் ஆண்டிற்கு பிறகு, நாட்டின் வரலாற்றில், அமைச்சரவையில் அதிகமான காலியிடங்கள் இருந்தது, தற்போதைய அரசாங்கத்தில்தான் என்று கூறிய முனைவர் மணிமாறன், பெரிய காலத் தாமதங்களின்றி சரியான நேரத்தில் அமைச்சரவை சீரமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டாவதாக, 16-வது பொதுத் தேர்தலை நோக்கிய நகர்வுக்கும் திட்டமிடலுக்கும் இந்த புதிய அமைச்சரவை, பலமாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று தாம் நம்புவதாக முனைவர் மணிமாறன் தெரிவித்தார்.
புதிய முகங்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளதால் அது நடப்பு அரசாங்கத்திற்கும் அதன் கூட்டணிகளுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறுகின்றார்.
இதனிடையே, இந்திய சமுதாயத்திற்கு முழு அமைச்சர் பதவி வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு கோணங்களில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
அமைச்சரவையில், இந்தியர்களுக்கான முழு அமைச்சர் நியமனமில்லாமல் அந்த சமுதாயத்தின் எதிர்பார்ப்பு கேள்விக்குறியான வேளையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதை மணிமாறன் சுட்டிக்காட்டினார்.
இந்த நகர்வு, சமுதாயத்தினரிடையே நல்ல வரவேற்பை பெறும் என்றும் அவர் எதிர்பார்க்கின்றார்.
ஆண்டின் இறுதியில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முடிவில் பிரதமரின் இந்த புதிய அமைச்சரவை, அடுத்த ஆண்டிற்கு சிறந்த தொடக்கமாக இருப்பதோடு வலுவான குழுவாகச் செயல்படுவதையும் உறுதி செய்யும் என்று பிரதமர் நம்புவதாக முனைவர் மணிமாறன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)