அரசியல்

அமைச்சரவை மாற்றம் மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பாதிக்காது

18/12/2025 04:03 PM

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பெர்னாமா) --  அமைச்சரவை மாற்றமும் அதற்கான நியமனங்களும் நாட்டில் உள்ள இனங்களின் குறிப்பாக மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பாதிக்காது என்று மடானி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அனைத்து தரப்பினரின் உரிமைகளும் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அமைச்சுகளின் அனைத்து முக்கிய முடிவுகளும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு உட்பட்டவை என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹமாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறையின் புதிய அமைச்சராக ஹன்னா யோ நியமிக்கப்பட்டது குறித்த பொதுமக்களின் கருத்து குறித்து பதில் அளித்த டாக்டர் ஹமாட் சாஹிட்  அந்த நியமனத்தை இனம் அல்லது கட்சி பின்னணியின் கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது என்று கூறினார்.

''ஹன்னா யோ ஜ.செ.க.வைச் சேர்ந்தவராக இருந்தாலும், சீன அமைச்சர் மற்றும் சீன துணை அமைச்சராக அவர்களைப் பார்க்க வேண்டாம். விளையாட்டு அமைச்சை நிர்வகித்த எனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து, அந்த அமைச்சின் செயல்திறன், குறிப்பாக அவரது தலைமையின் கீழ் விளையாட்டுத் துறையில் இனப் பிளவுகளைக் காணவில்லை என்பதைக் கண்டேன். மேலும் ஹன்னா யோ வழிநடத்திய அமைச்சின் எந்த இனம் சார்ந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை என்பதை என்னால் காண முடிகிறது.'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி 

முக்கியமான நிறுவனங்கள் இன்னும் மலாய்க்காரர்கள் தலைமையில் வழிநடத்தப்படுவதால் கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவானில் உள்ள மலாய்க்காரர்களின் வளர்ச்சி மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

வியாழக்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய Poly-Tech பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அஹ்மாட் சாஹிட் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)