பொது

13.17 கிலோகிராம் எடைக் கொண்ட கஞ்சா பூக்களை ஜே.கே.டி.எம் பறிமுதல்

18/12/2025 04:11 PM

ஜோகூர் பாரு, டிசம்பர் 18 (பெர்னாமா) -- கடந்த மாதம், பொட்டலம் மற்றும் கடித பட்டுவாடா சேவை மையத்தில், 13.17 கிலோகிராம் அல்லது 12 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா பூக்களை பறிமுதல் செய்ததன் வழியாக, அரச மலேசிய சுங்கத்துறை, ஜே.கே.டி.எம், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கையை முறியடித்துள்ளது.

ஜோகூர்  ஜே.கே.டி.எம் போதைப்பொருள் தடுப்புப் குழுவின் தகவலின் அடிப்படையில், செனாய் மற்றும் ஜோகூர் பாருவைச் சுற்றி இரண்டு அதிரடி சோதனைகளை தமது தரப்பு மேற்கொண்டதாக ஜோகூர் மாநில சுங்கத்துறை இயக்குநர் அமினுல் இஸ்மீர் முஹமட் சொஹைமி கூறினார்.

செனாயில் உள்ள ஒரு பொட்டலம் மற்றும் கடித பட்டுவாடா சேவை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 13.043 கிலோகிராம் அல்லது 12 லட்சம் மதிப்புள்ள 24 கஞ்சா பூக்கள் பொட்டலம் அடங்கிய இரண்டு பெட்டிகளைத் தங்கள் தரப்பு கைப்பற்றியதாக, அமினுல் இஸ்மீர் கூறினார்.

''ஜோகூர் மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை, செனாயைச் சுற்றியுள்ள பொட்டலம் மற்றும் கடித பட்டுவாடா சேவை மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்தது. இரண்டு பெட்டிகளை முழுமையாக சோதனை செய்ததில் கஞ்சா வகை போதைப்பொருள் கண்டறியப்பட்டது. இரண்டு பெட்டிகளும் வெளிநாடு அதாவது இங்கிலாந்திற்கு அனுப்பப்படவிருந்தது,'' என அமினுல் இஸ்மீர் முஹமட் சொஹைமி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில், கடந்த மூன்றாம் தேதி 21 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B(1)(a)-வின் கீழ் வழக்கு பதிவாகியிருந்தது.

அதோடு, சம்பவத்திற்கு தொடர்புடைய மற்றொரு 23 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டவர், கடந்த மாதம் 25-ஆம் தேதி ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அதே சட்டம் செக்‌ஷன் 6 மற்றும் செக்‌ஷன் 39A(2)-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)