மாஸ்கோ, டிசம்பர் 18 (பெர்னாமா) -- அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை வழி தீர்க்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதன் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.
பல நெருக்கடிகளை சுமூகமாக தீர்க்க ரஷ்யா முயற்சிகள் மேற்கொண்டாலும், அதனை தடுக்க மேற்கத்திய நாடுகள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ரஷ்யா–உக்ரேன் மோதலைத் தொடங்குவதற்கும் மேற்கத்திய நாடுகளே வித்திட்டதாக விளாடிமிர் புதின் கூறினார்.
2022-ஆம் ஆண்டில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரேனே போரைத் தொடங்கியதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமது தரப்பு அதை முடிவுக்கு கொண்டு வர மட்டுமே முயற்சிப்பதாக அவர் விவரித்தார்.
இருப்பினும், அதற்கான துல்லியமான காரணத்தையும் ஆதாரத்தையும் அவர் முன்வைக்கவில்லை.
தமது தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான முறையில் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மன்றக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய புதின் அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)