உலகம்

டித்வா புயலால் பயிர்கள் சேதம்; சிக்கலை எதிர்நோக்கும் விவசாயிகள்

19/12/2025 01:39 PM

கொழும்பு, நவம்பர் 19 (பெர்னாமா) -- இலங்கையை டித்வா புயல் தாக்கியதில், தங்கள் பயிர்கள் வெள்ளத்தில் பாழானதில் கடன் சூழ்நிலைக்குத் தள்ள நேரிடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நகைகளை அடகு வைத்தும், கடன் பெற்றும், வாங்கி பயிரிட்ட விதைகள், ஒரு மாதத்திற்கு பின்னர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதில் அவர்கள் இச்சூழ்நிலையை எதிர்நோக்குகின்றனர்.

டித்வா புயல் 535,000 ஹெக்டேர் நிலப்பரப்பிலான பயிர்களை வேரோடு அழித்தப் பிறகு, மீண்டும் நடவு செய்வது ஒரு கடினமான பணியாகும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

"டித்வா புயல் அனைத்தையும்அழித்துவிட்டது. எதையும் காப்பாற்ற முடியவில்லை. நாங்கள் நெல் விதைகளை நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அப்புல தாக்கியது. வங்கிக் கடன் மற்றும் எங்கள் நகைகளை அடகு வைத்து விதைகளை வாங்கினோம்," என்று விவசாயி நிமேஷ் பண்டுகுமார கூறுகிறார்.

"மலைப்பகுதியிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட சேறு நெல் வயலை மூடிவிட்டது. சேற்றை அகற்றி மீண்டும் நடவு செய்ய நேரமில்லை. வீட்டைப் போலவே நெல் வயலும் நிலச்சரிவில் அழிந்து போனதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட முடியாது," என்கிறார் விவசாயிபட்டினி கெடேரா நிஹால்.

அதே வேளையில், 120,000 ஹெக்டருக்கும் அதிகமான பயிர்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டதாகவோ அல்லது சேறு மற்றும் மணலில் புதைந்ததாகவோ அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.

2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டில், நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 18 லட்சம் குடும்பங்கள் பயிரிடும் அரிசி, காய்கறிகள் மற்றும் மக்காச்சோளத்தின் முக்கிய பயிர் பகுதிகளை, டித்வா தாக்கியது.

இந்நிலையில், முற்றிலுமாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்த ஒரு லட்சத்து 50,000 ரூபாய் இழப்பீட்டு தொகை பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

மேலும், வழங்கப்படும் அப்பணம் பற்றாக்குறையாகிவிடும் என்றும் அவர்கள் கவலைக் கொண்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)