புத்ராஜெயா, டிசம்பர் 21 (பெர்னாமா) -- ஆசியான் தலைவராக மலேசியா ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தை டிசம்பர் 22ஆம் தேதி கோலாலம்பூரில் நடத்தவுள்ளது.
இக்கூட்டத்தில் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி குறித்து கலந்துரையாடப்படும் என்று விஸ்மா புத்ரா தெரிவித்திருக்கிறது.
டிசம்பர் 11ஆம் தேதி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.
இந்த சிறப்புக் கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தலைமையேற்பார்.
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இக்கூட்டம் தளமாக அமையும்.
மேலும், பதற்றங்களையும் விரோதங்களையும் தணிக்க ஆசியான் மேற்கொள்ளக்கூடிய தொடர்ச்சியான நடவடிக்கைகளைக் கண்டறியவும் இக்கூட்டம் வழிவகுக்கும் என்று விஸ்மா புத்ரா கூறியது.
இச்சிறப்புக் கூட்டத்தின் ஏற்பாடு ஒற்றுமைக்கான ஆசியானின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக விஸ்மா புத்ரா விவரித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)