பொது

மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை ஒருமைப்பாட்டு அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்

21/12/2025 05:46 PM

பட்டர்வொர்த், டிசம்பர் 21 (பெர்னாமா) -- இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே நகர்ப்புற வறுமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை ஒருமைப்பாட்டு அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளைப் பொருட்படுத்தாமல் தற்போது இந்திய சமூகத்தின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்தியர்களுக்கு உதவுவதைத் தாம் உறுதி செய்யவிருப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் இந்தியப் பெருந்திட்டத்தை ஒருமைப்பாட்டு அரசாங்கம் நூறு விழுக்காடு செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒதுக்கீடு போதுமானதாக இல்லாவிட்டால் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மாண்புமிகு பிரதமரிடம் நான் கூறுவேன்'', என்றார் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி.

ஞாயிற்றுக்கிழமை பினாங்கு பட்டர்வொர்த்தில் மக்கள் சக்தி கட்சியின் 17வது ஆண்டு பொது கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கான அணுகலை விரிவுபடுத்துவதோடு நகர்ப்புற வறுமை குறிப்பாக இந்திய சமூகத்தினரிடையே அதிகரித்து வரும் கவலைக்குரிய பிரச்சினையை நிவர்த்தி செய்வதே பெருந்திட்டத்தின் முக்கிய அம்சமாக அமையும் என்று புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

''நகர்ப்புற வறுமை கிராமப்புற வறுமையை விட மோசமானது என்பதைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் குறிப்பாக இந்தியர்களிடையே'', என்றார் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி.

இந்திய சமூகத்தினர் உட்பட, வேலையின்மை மற்றும் கல்வி இடைநிற்றல் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான முக்கிய அணுகுமுறைகளில் ஒன்றாக TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தேசிய TVET மன்றத்தின் தலைவரான டாக்டர் அஹ்மாட் சாஹிட் வலியுறுத்தினார்.

இதனிடையே தேசிய முன்னணியில் ம.இ.காவின் நிலை குறித்து கருத்துரைத்த டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் அதன் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெளிவுப்படுத்தினார்.

''சுதந்திரம் கோரப்பட்டபோது ம.சீ.சவும் ம.இ.காவும் கூட்டணியில் இருந்தன என்பது நமக்குத் தெரியும், மேலும், தே.மு எழுபது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. பிரதிநிதிகள் கட்சித் தலைமைத்துவம் முடிவுகளை எடுக்க முழுமையான அதிகாரத்தை வழங்கியதால் தற்போதைய தலைமை வேறுவிதமாக முடிவு செய்தால் அவர்களால் (மஇகா) ஒரு முடிவை எடுக்க முடியாவிட்டால் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்'', என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)