புத்ராஜெயா, டிசம்பர் 21 (பெர்னாமா) -- அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் இடையிலான தொடர்பு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து தெரிவிக்கும் போது அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
''மக்களைச் சென்றடையாது அல்லது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றால் நல்ல தகவல்களை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. இலக்கு அவர்கள் பயன்படுத்தும் தளம் மற்றும் மிகவும் பொருத்தமான வழங்கும் முறையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்'', என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.
தற்போதைய தகவல் தொடர்பு சாதனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கருத்து தெரிவித்த ஃபஹ்மி, வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மூலம் அதிக தகவல்களைப் பெறுவதைப் பல ஆய்வுகள் காட்டுவதாகக் கூறினார்.
இருப்பினும், பாரம்பரிய ஊடகங்களின் பயன்பாட்டு விகிதம் குறைந்தாலும், தொலைக்காட்சி, வானொலி மற்றும் நாளிதழ்களில் இடம்பெறும் செய்திகளில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''இளைய தலைமுறையினர் குறைவாகத் தொலைக்காட்சி பார்க்கிறார்கள், நாளிதழ்களைப் படிக்கிறார்கள், வானொலியைக் கேட்கிறார்கள். ஆனால் இந்த மூன்று தகவல் சாதனங்களும் மிக மிக உயர்ந்த நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளன. இளைஞர்கள் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தால் அதை நம்புவார்கள். அதை நம்புவது அவர்களுக்கு மிகவும் எளிதானது. அவர்கள் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அதைப் பார்க்கும்போது, "இது உண்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது தொலைக்காட்சியில் இருக்காது," என்று நினைக்கிறார்கள். எனவே இது ஒரு தனித்துவமான சூழ்நிலை'', என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)