பொது

ம.இ.காவின் இடத்தைப் பிடிக்க மக்கள் சக்தி ஒருபோதும் எண்ணம் கொண்டதில்லை

21/12/2025 07:15 PM

பட்டர்வொர்த், டிசம்பர் 21 (பெர்னாமா) -- தேசிய முன்னணியில் ம.இ.காவின் இடத்தைப் பிடிக்க மலேசிய மக்கள் சக்தி கட்சி ஒருபோதும் எண்ணம் கொண்டிருந்ததில்லை.

ம.இ.கா மற்றும் தேசிய முன்னணிக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சனையையும் மக்கள் சக்தி கட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாது.

மாறாக, நாட்டில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்காகவும் ம.இ.காவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். எஸ் தனேந்திரன் தெரிவித்துள்ளார்.

''நாங்கள் அவர்களுக்கு மாற்று கட்சியாகவும், அவர்களுக்கு எதிர்ப்பாகவும் இருக்க விரும்பியதில்லை. கொள்கை என்பது மிகவும் முக்கியம்'', என்றார் டத்தோ ஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன்.

இந்திய சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதற்கு ம.இ.கா 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் நிலையில் அது மதிக்கப்பட வேண்டும் என்றும் டத்தோ ஶ்ரீ தனேந்திரன் அறிவுறுத்தினார்.

மேலும், மக்கள் சக்தியும் ம.இ.காவும் இணைந்து இந்தியர்களின் ஒட்டுமொத்தக் குரலாக இருப்பதன் வழி அது வலுபெறும் என்று தாம் பலமுறை விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

''ம.இ.காவிற்கும் மக்கள் சக்திக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்தியர்களுக்கு அவர்கள்தான் அதிகம் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தியர்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டுள்ளனர். அதை நான் வெளிப்படையாகவே கூறுவேன். மக்கள் சக்தி கட்சி 10% செய்திருந்தால் அவர்கள் 90% செய்துள்ளனர்'', என்றார் டத்தோ ஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன்.

இன்று மக்கள் சக்தி கட்சியின் 17வது ஆண்டு பொது கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மஇகாவுடனும் அதன் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுடனும் தமக்கு மிகவும் நெருக்கமான உறவு இருப்பதாகவும் அதை உடன்பிறந்தவர்களுக்கு இணையாகவும் அவர் ஒப்பிட்டு பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை