கம்போடியா, டிசம்பர் 21 (பெர்னாமா) -- தாய்லாந்துடன் இரண்டு வாரங்களாக நீடித்து வந்த போர் காரணமாக லட்சக் கணக்கான கம்போடிய மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் ஐந்து லட்சத்து 18 ஆயிரத்து 611 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
மீண்டும் தொடரும் எல்லை மோதல்களினால் தாய்லாந்தில் சுமார் நான்கு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகப் பேங்காக் அமலாக்க தரப்பினர் தெரிவித்தனர்.
அவ்விரு நாடுகளுக்கு இடையே ஆளில்லா விமானங்கள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தி இம்மாதம் மீண்டும் தொடங்கிய மோதல்களில் தாய்லாந்தில் குறைந்தது 22 பேரும் கம்போடியாவில் 19 பேரும் கொல்லப்பட்டனர்.
காலனித்துவ காலத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட 800 கிலோமீட்டர் தொலைவிலான எல்லை மற்றும் அங்கு அமைந்துள்ள பல பழங்காலத்து கோவில்களின் இடிபாடுகள் தொடர்பான வட்டார பிரச்சனைகள் இந்த மோதலுக்குக் காரணமாக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் ஐந்து நாள்கள் நீடித்த மோதல்களில் அதிகமானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதிய மோதல்களைத் தூண்டியதாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)