பிரிக்பீல்ட்ஸ், டிசம்பர் 22 (பெர்னாமா) -- மலேசிய கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் முதன்மையான பங்களிப்பை வழங்கும் ஆளுமைக்கு விருதுடன் ஐயாயிரம் ரிங்கிட் ரொக்கத் தொகையையும் வழங்கி கௌரவித்து வருகிறது 'வல்லினம்' மின்னியல் கலை இலக்கிய இதழ்.
எழுத்தாளர்களான அ.ரங்கசாமி மற்றும் சை.பீர்.முகமது ஆகியோருடன் ஆய்வாளர் ஜானகி ராமனுக்கும் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள வேளையில் இவ்வாண்டு முன்னாள் தேர்வு வாரிய அதிகாரியும் கல்வியாளருமான பி.எம்.மூர்த்தி அவ்விருதுக்குத் தகுதி பெற்றிருந்தார்.
மலேசிய பொதுத்தேர்வுகளில் படைப்பிலக்கியத்தை அறிமுகம் செய்தது தொடங்கி எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பெரும் பங்காற்றிய பி.எம். மூர்த்தியைச் சிறப்பு செய்யும் வகையில் வல்லினம் விருது வழங்கப்பட்டதாக அந்த மின்னியல் இதழின் ஆசிரியர் ம. நவீன் தெரிவித்தார்.
''தமிழ் இலக்கியத்தை எஸ்.பி.எம். தேர்வில் எடுத்துக்கொண்டோர் வெறும் 300 பேர் மட்டுமே இருந்த காலகட்டத்தில், அதை பரப்புவதற்காக ஓயாமல் பாடுபட்டு, இன்று 4,000 பேர் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு எழுதும் நிலைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவர் பி.எம்.மூர்த்தி அவர்கள்.
தொடர்ந்து, தமிழ் கலைச்சொற்களுக்கான இரண்டு நூல்களைத் தயாரித்து மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் வழங்கியதன் மூலம் இந்நாட்டில் தமிழ் மொழி செழித்து வளர அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.'', என்றார் ம. நவீன்.
அதுமட்டுமின்றி ஆரம்பப் பள்ளியிலும் இடைநிலைப் பள்ளியிலும் சிறுகதைத் துறை வளர அவர் உருவாக்கிய தேர்வுத் தாள் மாற்றம் முக்கியப் பங்காற்றியதையும் நவீன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பி.எம் மூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூலை வல்லினம் பிரசுரித்து வெளியீடு செய்ததாகவும் நவீன் தெரிவித்தார்.
''கனவுகளைத் துரத்தி சென்றவனின் கதை என்ற தலைப்பில் இந்நூல் வெளியாகியுள்ளது. இந்த நூல் வெளியீடு ஒரு விருதுவாகவே அமைந்துள்ளது. மேலும், இதே நூல் தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.'', என்றார் ம. நவீன்.
நேற்று பிரிக்பீல்ட்ஸ் ஒய்.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற வல்லினம் விருது விழாவிற்குத் தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறப்பு விருந்தினராகப் பி.எம்.மூர்த்திக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)