ஷா ஆலாம், 16 நவம்பர் (பெர்னாமா) -- ம.இ.காவில் 79வது பேராளர் மாநாட்டின் முத்தாய்ப்பு அங்கமாக ம.இ.காவின் வளர்ச்சிக்கு நீண்ட நெடிய சேவையாற்றி கட்சியை அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற நால்வருக்கு மூத்த தலைவர்களின் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதில் ம.இ.கா தோற்றுநரான ஜோன் தீவியின் விருது முன்னாள் துணையமைச்சர் டான் ஶ்ரீ டத்தோ குமரன் கருணாகரனுக்கும், கூட்டுறவுக் கழகத் தந்தை துன்.வீ.தி.சம்பந்தனின் விருது டான் ஶ்ரீ பேராசிரியர் டத்தோ டாக்டர் டி.மாரிமுத்துவிற்கும், டான் ஶ்ரீ மாணிக்கவாசகத்தின் விருது டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணனுக்கும் இறுதியாக துன்.ச.சாமிவேலுவின் விருது டத்தோ எம்.செல்லதேவனுக்கும் வழங்கப்பட்டது.
நண்பகலுக்கு முன்னதாக வாசிக்கப்பட்ட 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கை பரிசீலிக்கப்பட்டதுடன் கட்சியின் வளர்ச்சியை முன்னிறுத்திய தீர்மானங்களும் வாசிக்கப்பட்டு பேராளர்களால் அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து கட்சியின் பொருளாளர் டத்தோ என்.சிவகுமார் 2024ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கையை வாசித்து அதுவும் பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாலை மணி நான்கிற்குப் பிறகு கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் வழிநடத்திய சட்டத்திருத்த மற்றும் தீர்மானங்கள் மீதான விவாதமும் சீராக நடைபெற்றது.
இன்று காலை மணி எட்டு முதல் சிலாங்கூர், ஷா ஆலாம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ம.இ.காவின் 79ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் நாடு தழுவிய அளவிலிருந்து 1,500க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)