பொது

நிதி நெருக்கடியைக் குறைக்கும் 'சாரா'

23/12/2025 06:25 PM

கோலாலம்பூர், டிசம்பர் 23 (பெர்னாமா) -- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளித் தவணை தொடங்கப்படும் நிலையில் சீருடைகள், காலணிகள் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளில் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அச்செலவுகளுக்கு நூற்றுக்கணக்கான ரிங்கிட் வரை தேவைப்படும் என்பது மிகப் பெரிய சவாலாகும்.

அரசாங்கம் வழங்கிவரும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டம் 'சாரா'  நிதி நெருக்கடியைக் குறைத்து, குடும்பச் செலவினச் சுமையைச் சமாளிக்கவும் உதவுகிறது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான மலேசியப் பிரஜைகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட 100 ரிங்கிட் மதிப்பிலான 'சாரா' உதவித் தொகையை அடிப்படை பொருள்களை வாங்குவதற்காக இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் பயன்படுத்தலாம்.

ரமலான் மாதம் மற்றும் சீனப் புத்தாண்டுக்கான முன்னேற்பாடுகளுக்கு உதவும் வகையில் கூடுதல் 100 ரிங்கிட் மதிப்பிலான 'சாரா' உதவித் தொகை 2026 பிப்ரவரி மாதத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

"இந்த உதவி தொகை உண்மையில் பெரும்பாலான B40 மற்றும் M40 குடும்பங்களின் சுமையைக் குறைக்கிறது. ஒரு குடும்பத்தில் 4 அல்லது 5 பேர் இருந்தால் அக்குடும்பத்திற்கு 500 ரிங்கிட் நிதி உதவி பெறுவதற்கு வாய்ப்பு உள்ள பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க இத்தொகை பெரும் உதவியாக இருக்கிறது'', என்றார் கவிராஜன் ஜெகராஜன்.

''என்னைப் பொருத்த வரை இது ஒரு நல்ல திட்டம் குறிப்பாகப் பள்ளி உடைகளை வாங்கும் செலவைக் குறைப்பதில் இது உதவுகிறது. மற்ற தேவைகள் குறித்துப் பார்க்கும்போது பள்ளி கட்டணங்கள் எதுவும் இல்லாத நிலையில் PIBG கட்டணம் மட்டுமே உள்ளது. இது மிகவும் உதவிகரமாக உள்ளது. பி40, எம்40 குடும்பங்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆகவே, அரசாங்கம் இந்த உதவி செய்ததற்கு மிகவும் நன்றி'', என்றார் முஹமட் ஹைருல்னிசுவான் ஹனாஃபி.

தொடக்கத்தில் மக்களுக்கான ஒரு அங்கீகாரமாக அரசாங்கம் வழங்கிய இந்த 'சாரா' உதவித் தொகை இக்கட்டடான சூழ்நிலையில் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைப்பதில் பி40 பிரிவினருக்கு ஒரு கூடுதல் உதவியாக மாறியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)