காஜாங், டிசம்பர் 26 (பெர்னாமா) -- இம்மாதம் 21-ஆம் தேதி, கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட Op Gaharu 2.0 சோதனை நடவடிக்கையின் மூலம் 104 கோடி ரிங்கிட் மதிப்புள்ள 6.2 டன் எடைக் கொண்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் வழி, கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட ஓர் அனைத்துலக போதைப்பொருள் கும்பல் நடவடிக்கையை போலீசார் முறியடித்தனர்.
டிசம்பர் 16-ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட Op Gaharu 1.0 சோதனை நடவடிக்கையின் மூலம் மூன்று பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் கூறினார்.
"பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப் பொருள் எம்.டி.எம்.ஏ வகையைச் சோர்ந்த திரவமென சந்தேகிக்கப்படுகின்றது. அதன் எடை சுமார் 6,191 கிலோ கிராமாகும். கொக்கேன் வகை போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளின் எடை 20.3 கிலோகிராம், கெத்தமீன் என சந்தேகிக்கப்படும் வெள்ளை மாவின் எடை 1.3 கிலோகிராம் மற்றும் போதைப்பொருளை பதப்படுத்தும் பல்வேறு உபகரணங்கள். இந்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு 104 கோடி ரிங்கிட் என்று கணிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் சுமார் 2 கோடியே ஏழு லட்சம் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது,'' என்றார் அவர்.
வெளிநாட்டிலிருந்து வேதியியலாளர்களையும் பொருள்களையும் இறக்குமதி செய்து, அதனை உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் ஒப்படைத்து பதப்படுத்தும் நடவடிக்கையை இக்கும்பல் மேற்கொண்டு வந்தது, விசாரணையில் கண்டறியப்பட்டதாக, அவர் கூறினார்.
மேலும், போதைப்பொருள் வழக்கில் இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட மிகப் பெரிய கும்பல் இதுவாகும் என்று Datuk Hussein தெரிவித்தார்.
இதனிடையே, 4 தொழிற்சாலைகள் மற்றும் 10 குடியிருப்பு வீடுகள், போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகங்களாகவும் சேமிப்பு கிடங்குகளாகும் மாற்றப்பட்டதுடன், ஹங்காங், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கு இக்கும்பல் போதைப்பொருளை விநியோகம் செய்து வந்ததாகவும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)