பொது

1எம்.டி.பி தொடர்பான 25 குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி என தீர்ப்பு

26/12/2025 07:32 PM

கோலாலம்பூர், 26 டிசம்பர் (பெர்னாமா) --  ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், 1MDB-யின் 230 கோடி ரிங்கிட் நிதி மோசடியை உட்படுத்திய 25 குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றவாளி என்று, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பிரதமர் பதவியைப் பயன்படுத்தி கையூட்டு பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் அதே தொகையை உட்படுத்தி கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான இதர 21 குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி என்று உயர் நீதிமன்ற நீதிபதியாக இவ்வழக்கை செவிமடுத்த கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லொரண்ஸ் செகுவெரா தீர்ப்பளித்தார்.

72 வயதுடைய டத்தோ ஶ்ரீ நஜிப்பிற்கு எதிரான அனைத்து 25 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு வக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததைத் தொடர்ந்து, டத்தோ கோலின் லொரண்ஸ் அந்தத் தீர்ப்பை அளித்தார்.

2011ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி வரை, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜாலான் ராஜா சூலானில் உள்ள, AmIslamic Bank வங்கிக் கிளையின் வழி 1MDB நிதியில் இருந்து 230 கோடி ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாக நஜிப் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கையூட்டு பெற்ற தொகையில் ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் ஆகிய இரண்டில் மிக அதிக தொகை அபராதமாகவும் விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் சட்டம், செக்‌ஷன் 23(1), அதே சட்டம் செக்‌ஷன் 24(1)-இன் கீழ் நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், 2013ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியில் இருந்து அதே ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அதே வங்கியில் கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான குற்றங்களுக்காக அவர் மீது 21 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50 லட்சம் ரிங்கிட் அபராதம் மற்றும் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம், அம்லா, செக்‌ஷன் 4 உட்பிரிவு 1 உட்பிரிவு A-வின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)