ஜெருசலம், டிசம்பர் 27 (பெர்னாமா) -- சோமாலி லேண்ட் பிரதேசத்தை ஒரு சுதந்திர நாடாக இஸ்ரேல் அங்கீகரித்ததற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஓ.ஐ.சி பொதுச் செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது சோமாலியின் இறையாண்மை தேசிய ஒற்றுமை மற்றும் வட்டார ஒருமைப்பாட்டை மீறுவதாக அச்செயலகம் சாடியுள்ளது.
சோமாலியா உடனான தனது முழு ஒற்றுமையையும் நாட்டின் இறையாண்மை மற்றும் வட்டார ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை உறுதிப்படுத்தியதோடு அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவையும் அது மீண்டும் வலியுறுத்தியது.
அதேவேளையில் அனைத்துலகச் சட்டத்துடன் ஓ.ஐ.சி மற்றும் ஐ.நா சாசனங்களையும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை அந்தப் பொதுச் செயலகம் வலியுறுத்தியது.
முன்னதாகச் சோமாலி லேண்ட் குடியரசை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக வெள்ளிக்கிழமை இஸ்ரேல் அங்கீகரித்தது.
சோமாலி லேண்ட்டை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் விளங்குகிறது.
சோமாலி லேண்ட் உடன் விவசாயம், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் இஸ்ரேல் உடனடி ஒத்துழைப்பை நாடும் என்று பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)