பொது

பேராக் மாநிலத்தில் கல்வி தோட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள்

27/12/2025 06:37 PM

ஈப்போ, டிசம்பர் 27 (பெர்னாமா) -- தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பேரா மாநில அரசாங்கம் வழங்கிய இரண்டயிரம் ஏக்கர் நிலத்தை பேராக் மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் நிர்வகித்து வருகிறது.

அந்த அறவாரியத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்பை வழங்கும் என்று அதன் ஆட்சிக குழு உறுப்பினரும், இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

பேராக் மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் அதன் செயல் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சிவநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

''இந்த ஐந்து வருடம் முடிந்தவுடன் மறு நடவும் வரும். ஆனால், அப்பொழுது அவர்களுக்கு கடன் எதுவும் தேவைப்படாது. அந்தத் தோட்டம் தனித்து செயல்படும். நிர்வாகம் முக்கியமானது. இது நல்ல நிர்வாகம். வரக்கூடிய வருமானத்தை மாணவர்களின் மேம்பாட்டிற்காக முழுமையாக பயன்படுத்துவார்கள் என்று பேராக் மாநில அரசாங்கம் நம்புகிறது,''என்றார் அவர்.

இன்று, பேரா மாநில அரசாங்க அலுவலகத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் 134 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டப் பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அந்நிலத்தை நிர்வகிக்க பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அங்கு செம்பனை பயிர் செய்வதன் மூலம் கிடைக்கின்ற வருமானம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022 முதல் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடக்கமாக 750 மாணவர்களுக்கு தலா 200 ரிங்கிட் வழங்கப்பட்டதோடு, தமிழ்ப்பள்ளியிலும் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாக பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் தலைவர் முனியாண்டி சண்முகம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)