பொது

இணைய மோசடி; 2 லட்சத்து 12,000 ரிங்கிட் இழப்பு

27/12/2025 07:01 PM

கோத்தா திங்கி, டிசம்பர் 27 (பெர்னாமா) -- இணையம் வழியான இல்லாத வர்த்தக மோசடியில் பாதிக்கப்பட்ட 60 வயது பணி ஓய்வுப் பெற்ற ஒருவர் இரண்டு லட்சத்து 12,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் டிசம்பர் 26ஆம் தேதி தங்கள் தரப்புக்குப் போலீஸ் புகார் கிடைத்ததாகத் கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டென்ட் யூசோப் ஒத்மான் தெரிவித்தார். 

இவ்வாண்டு டிசம்பர் 19ஆம் தேதி வாட்சாப் செயலி மூலம் சந்தேக நபர் ஒருவருடன் கிடைத்த அறிமுகத்தைத் தொடர்ந்து அந்த பணி ஓய்வுப்பெற்றவர் இந்தத் தொகையை இழந்துள்ளார்.

மின்சார பொருள்கள், கணினி, ஆடைகள் மற்றும் இதர சில பொருள்களைத் தமது செயலி மூலம் மீண்டும் விற்பதற்கு மலிவான விலையில் வழங்குவதாகச் சந்தேக நபர் கூறியுள்ளார்.

தாம் ஏமாற்றப்படுவதை அறியாமல் பாதிக்கப்பட்டவர் சந்தேக நபருக்குச் சொந்தமான கணக்கில் பலமுறை பணத்தை மாற்றியுள்ளார்.

அதன் பின்னர் சந்தேக நபரின் தொலைபேசி எண் முடக்கப்பட்டிருந்ததால் அவரைத் தொடர்புக் கொள்ள முடியாமல் போனது.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதோடு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக யூசோப் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)