கோலாலம்பூர், டிசம்பர் 27 (பெர்னாமா) -- கெஅடிலான் கட்சித் தேர்தல் 17வது சபா மாநிலத் தேர்தல் மற்றும் அயர் குனிங் மாநில இடைத்தேர்தல் ஆகியவை இவ்வாண்டின் அரசியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் பெற்றன.
கெஅடிலான் கட்சித் தேர்தலில் 2025-2028ஆம் தவணைக்காகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மகள் நூருல் இஸ்ஸ்ச் அன்வார் அக்கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்பதவியைத் தற்காத்து போட்டியிட்ட டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தோல்வி கண்டதால் தாம் வகித்து வந்த பொருளாதார அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
அவரைத் தொடர்ந்து, கட்சித் தேர்தலில் தோல்வியுற்ற அதன் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
நவம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற சபா மாநில தேர்தலில் சபா மக்கள் கூட்டணி ஜி.ஆர்.எஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.
73 தொகுதிகளில் 29 தொகுதியைக் கைப்பற்றிய ஜி.ஆர்.எஸ், நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி, KINABALU PROGRESIF BERSATU கட்சி, உப்கோ மற்றும் நான்கு சுயேட்சை வேட்பாளர்களுடன் கூட்டணி அரசாங்கத்தை நிறுவியது.
தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசாங்கத்தில் பணியாற்றி வந்த உப்கோ தலைவர் டத்தோ இவோன் பெனெடிக்கும் தமது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் முஹமட் யுஸ்ரி பாக்கி 5,006 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
இந்த இடைத்தேர்தலில் அவர் மும்முனை போட்டியை எதிர்கொண்டார்.
அம்னோவை சேர்ந்த தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் அக்கட்சியை விட்டு விலகி கெஅடிலான் கட்சியில் இணைந்தார்.
முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சராக பணியாற்றிய அவர் கெஅடிலான் கட்சியில் இணைந்ததால் இரு கட்சி தரப்புகளுக்கும் சில கருத்து வேறுபாடு நிலவியது.
மேலும் தமது செனட்டர் பதவிக் காலம் நிறைவுற்றதால் அமைச்சர் பதவியை முடித்து கொண்ட அவர் MIDA எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய தலைவராக ஈராண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
பெர்சத்து கட்சியில் நிலவிய உட்பூசலால் தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல்ருடின் வான் ஜான் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹமாட் ஃபேசான் வான் அஹ்மட் கமல் ஒரு தவணைக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வாண்டு நாட்டின் சில மூத்த அரசியல் தலைவர்களின் மரணமும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அமாட் படாவி தமது 85வது வயதில் ஏப்ரல் 14ஆம் தேதி காலமானார்.
இதனிடையே, ம.இ.காவின் முன்னாள் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் ஜூன் 17ஆம் தேதி இயற்கையை எய்தினார். அவருக்கு வயது 76.
சபா தேர்தல் வெற்றி பெற்ற ஆறு நாள்களுக்குப் பிறகு சபா தேசிய முன்னணி தலைவரும் கினபத்தாங்கன் சட்டமன்ற உறுப்பினருமான 66 வயது டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)