பொது

இன்று அமலுக்கு வந்தது 2025 இணையப் பாதுகாப்புச் சட்டம்

01/01/2026 08:08 PM

கோலாலம்பூர், ஜனவரி 02 (பெர்னாமா) -- இன்று தொடங்கி அமல்படுத்தப்படும் 2025ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்புச் சட்டம், ONSA, இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதைப் பயன்படுத்துவர்களுக்குக் குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் சட்ட கட்டமைப்பைக் கோடி காட்டுகிறது.

ஆபத்து நிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துதல், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, புகாரளிக்கும் வழிமுறைகள் மற்றும் பயனீட்டாளர்களின் உதவி உட்பட இணையத்தினால் ஏற்படும் பாதகத்தைக் கையாள உரிமம் வழங்கப்பட்ட  அச்சேவையை வழங்குபவர்களுக்கான கடப்பாடு மற்றும் கட்டாய பொறுப்புகளை ONSA நிர்ணயித்துள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், AKM 1998இன் கீழ் உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்கு ONSA பயன்படுத்தப்படும்.

எனினும், தனிப்பட்ட பயனர்களை அச்சட்டம் உள்ளடக்கவில்லை.

இன்று அமலுக்கு வந்த AKM 1998இன் செக்‌ஷன் 46Aஇன் 'deeming' சட்டவிதியின் கீழ் உரிம தகுதிகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து சமூக ஊடகத் தளங்களும், ONSA உட்பட மலேசியச் சட்டங்களுக்கு உட்பட்டுள்ளதாக எம்.சி.எம்.சி கூறியது.

தகுந்த மேற்பார்வை மற்றும் பொறுப்புடமைக்குப் பெரிய அளவிலான இணையத் தளங்கள் உட்பட்டவை என்பதை உறுதி செய்யும் ஒழுங்கமைப்பு அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை உள்ளதாக அவ்வாணையம் மேலும் தெரிவித்தது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)