கோலாலம்பூர், டிசம்பர் 30 (பெர்னாமா) -- ஒரே மலேசியா மேம்பாட்டுத் திட்டம், 1MDB வழக்கு தொடர்பில் தமக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரத்து 140 கோடி ரிங்கிட் அபராதம் விதித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ராசச் மேல்முறையீட்டைச் செய்துள்ளார்.
அது தொடர்பான மேல்முறையீட்டு அறிவிக்கையை நேற்று மாலை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்ததாக நஜீப்பின் வழக்கறிஞர் முஹமட் ஃபர்ஹான் முஹமட் ஷஃபீ தெரிவித்ததை அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் இன்று உறுதிபடுத்தினார்.
பிரதமர் பதவியைப் பயன்படுத்தி கையூட்டு பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் 230 கோடி ரிங்கிட் நிதியை உட்படுத்தி கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான இதர 21 குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி என்று உயர் நீதிமன்ற நீதிபதியாக இவ்வழக்கை செவிமடுத்த கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செக்வேரா கடந்த வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பிற்கு எதிராக இந்த மேல்முறையீடுச் செய்யப்பட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டிற்காக ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் 1,140 கோடி ரிங்கிட் அபராதத்தையும் உயர் நீதிமன்றம் விதித்தது.
விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பணமோசடி குற்றச்சாட்டிற்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நஜிப்பிற்கு விதிக்கப்பட்டது.
விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை அனைத்தும் ஏகக் காலத்தில் நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதால் 72 வயதான நஜிப் 15 ஆண்டுகள் அத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)