சுங்கை பட்டாணி, டிசம்பர் 30 (பெர்னாமா) -- கடந்த ஜனவரி முதல் கேங் ரமேஷ் எனப்படும் திட்டமிட்டு குற்றச்செயலில் ஈடுபடும் குழு உறுப்பினர்களாக இருந்ததாக 20 ஆடவர்கள் இன்று சுங்கை பட்டாணி செக்ஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நீதிபதி நாஜி சே மேட் முன்னிலையில் தமிழில் வாசிக்கப்பட்டபோது அந்த அனைத்து ஆடவர்களிடம் இருந்தும் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
G. மகேன், S.தனேஷ், R. ஷர்குணன், S. கணேஷ்ராம், V. மாதவன், J. தனேஷ், V. யணசேகர், பரமசிவன், G. யுவராஜ், M. பொங்கிஸ்வரன், P. புகனேஸ்வரன், S. நாகராஜன், R. கோபிநாத், R. குமரேசன், R. புவனேஸ்வரன், P. கதிரேசன், K. கேசவன், S. டெல்ஹிப்ராஜ், V. நவின் குமார் மற்றும் T. விவேகநாத் ஆகியோரே அந்த 20 ஆடவர்கள் ஆவர்.
24 லிருந்து 42 வயதுடைய அவர்கள் அனைவரும் குவாலா மூடா மாவட்டத்தில் உள்ள கம்போங் சுங்கை டிவிசனில் 2024ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி கடந்த டிசம்பர் மாதம் வரை கேங் ரமேஷ்சில் இருந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டுகளுக்குக் குறையாத மற்றும் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 130V (1)இன் கீழ் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாத நிலையில் இவ்வழக்கின் மறுவிசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)