சிறப்புச் செய்தி

புத்தாண்டில் புதிப்பொலிவுடன் பத்துமலை முருகன்

31/12/2025 08:09 PM

பத்துமலை, டிசம்பர் 31 (பெர்னாமா) -- பொன்னிற மேனியால் கண்கவர் பார்வையால் வேல் கொண்டு சிலாங்கூர் பத்துமலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமான் புத்தாண்டில் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சிக் கொடுக்க தயாராகியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாகப் புதுபிப்பு மற்றும் சாயம் பூசும் பணிகளால் மெருகேற்றப்பட்ட சுப்ரமணிய பெருமான் நாளை பக்தர்களுக்குத் தெய்வீக ஒளியுடன் அருள்பாலிக்கின்றார்.

2026ஆம் புத்தாண்டை முன்னிட்டு புதிய கோலத்தில் காட்சியளிக்கும் கந்தக் கடவுளைத் தரிசிக்கத் திருத்தலம் முழுவதும் பக்திப் பரவசம் களைகட்டியுள்ள வேளையில் இந்தப் புதுப்பிப்பு பணிகள் குறித்த சிறப்பு தொகுப்பைக் கொண்டு வருகிறது பெர்னாமா செய்திகள்.

தமிழ்நாட்டில் உள்ள அறுபடை முருகத் திருத்தலங்களை அடுத்து ஏழாம் படையாக மலேசிய மண்ணில் கடந்த 20 ஆண்டுகளுகளுக்கு முன்னர் 140 அடி உயரத்தில் பத்துமலை சுப்ரமணியனின் திருவுறுவ சிலை திறக்கப்பட்டது.

அவரைக் காண்பதற்குக் கோடிக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அன்று தொடங்கி இன்றுவரை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

வெயில் மழையில் அருள் கொடுத்து துணை நிற்கும் அவரை இந்த 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் புதுபித்து கொண்டாட ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் முடிவெடுத்திருக்கின்றது.

இந்த புதுப்பிப்பு மற்றும் சாயம் பூசும் நடவடிக்கைகள் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா விவரித்தார்.

''வெயிலின் தாக்கம், புறாக்களின் எச்சம் மற்றும் ஆங்காங்கே முளைத்திருந்த சிறு செடிகள் எனப் பொலிவிழந்திருந்த சிலையைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் புனரமைப்புப் பணிகளை நாங்கள் தொடங்கினோம். இதன் மூலம் முழுமையாகச் சாயம் பூசப்பட்டு சொர்ப்ப சீரமைப்பு பணியையும் செய்துள்ளோம்'', என்றார் டத்தோ சிவகுமார் நடராஜா.

140 அடி உயரம் முருகன் சிலையை வெறும் 20 பேர் மட்டுமே கொண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏற்பட்ட சவால்களையும் சிவகுமார் விவரித்தார்.

''தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரத் தங்க நிறச் சாயத்தைப் பயன்படுத்தி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில மாதங்களாக நிலவிய தொடர் மழை காரணமாகப் பணிகளை முடிப்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்ட போதிலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இப்புனரமைப்புப் பணிகளை நாங்கள் மனநிறைவுடன் நிறைவு செய்துள்ளோம்'', என்றார் டத்தோ சிவகுமார் நடராஜா.

ஜனவரி முதலாம் நாளில் மக்களுக்கு முருகப் பெருமானின் புதுப்பொலிவைக் காண்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து வருகை தந்துக்கொண்டிருக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்யாமல் அவர்களின் ஆவலையும் பூர்த்தி செய்வதற்காகப் பெரும் விழாவுக்கு முன்னரே முருகன் சிலை திறந்து வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தருவோர் புதிதாகச் சாயம் பூசப்பட்ட முருகன் சிலையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

''ஜனவரி திறக்கப்படும் என்று கூறினார்கள் ஆனால் தற்போது முருகன் சிலை திறகப்பட்டது எங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிதாக பூசப்பட்ட முருகன் சிலையும் பலபலவென ஜொலிக்கிறது'', என்றார் சுற்றுலா பயணி ராகுல் காலிடாஸ்.

''பார்க்க செம்மையாகவும் புதிதாகவும் இருக்கின்றது. முருகப்பெருமானின் இந்தப் புதிய கோலத்தைக் காண்பதற்கு நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாக மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது'', என்றார் சுற்றுலா பயணி லட்சுமி கவிவிஸ்வநாதன்.

''விண்ணைத் தொடும் உயரத்தில் பிரம்மாண்டமாக நிற்கும் முருகப் பெருமானின் சிலையும் அதற்குப் பின்னணியாக அமைந்திருக்கும் அந்தப் பசுமை மாறாத மலைகளும் மிக அழகாக இருக்கின்றது'', என்றார் சுற்றுலா பயணி வினோத் பிராசாட்.

நாளை பத்துமலை திருத்தல வளாகத்தில் பெருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனைக் காண்பதற்கு ஆயிரகணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)