பொது

சிலாங்கூரில், போக்குவரத்து சம்மன்கள் வழியாக மொத்தம் 19,500,000 ரிங்கிட் வசூல்

31/12/2025 03:32 PM

ஷா ஆலம், 31 டிசம்பர் (பெர்னாமா) -- மொத்தம் ஒரு கோடியே 95 லட்சம் ரிங்கிட் தொகை வசூலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2 லட்சத்து 58 ஆயிரத்து 345 போக்குவரத்து சம்மன்களுக்கு, சிலாங்கூர் போலீஸ் வெற்றிகரமாக தீர்வு கண்டுள்ளது.

நவம்பர் முதலாம் தேதி தொடங்கி நேற்று வரையில் அமல்படுத்தப்பட்ட பி.டி,ஆர்.எம் சம்மன்களுக்கு 70 விழுக்காடு கழிவு திட்டத்தின் வாயிலாக, கடந்த இரண்டு மாதங்களாக வசூலிக்கப்பட்ட தொகை அதுவாகும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ ஷசெலி கஹார் கூறினார்.

மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 759, POL 257 சம்மன்களுக்காக ஒரு கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 650 ரிங்கிட் வசூலிக்கப்பட்ட வேளையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 586 POL 170A சம்மன்களுக்காக 80 லட்சத்து 19 ஆயிரத்து 700 ரிங்கிட் தொகை வசூலிக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம், மிக அதிகமாக 27 லட்சம் ரிங்கிட்டும், அதைத் தொடர்ந்து இரண்டாவதாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகம் 21 லட்சம் ரிங்கிட்டும், மூன்றாவதாக காஜாங் போலீஸ் தலைமையகம், 17 லட்சம் ரிங்கிட்டையும் வசூலித்துள்ளன.

சம்மன்களை செலுத்த இலக்கவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு நேர்மறையான போக்காகக் கருதப்படுவதாக கூறிய ஷசெலி, இம்முறை அதன் வழி 94 லட்சத்து 51 ஆயிரத்து 880 ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)