ஹாங் காங், ஜனவரி 01 (பெர்னாமா) -- உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் புத்தாண்டை மிக மகிழ்ச்சியுடன் வாணவெடிகளுடனும் உற்சாகமாக வரவேற்றனர்.
அதன் தொகுப்பைத் தொடர்ந்து காண்போம்.
ஹாங் காங்கில், விக்டோரியா துறைமுகத்தில் பாரம்பரிய புத்தாண்டு முதல் நாள் வானவேடிக்கைகளுக்குப் பதிலாக நகரின் மத்திய மாவட்டத்தில் ஒரு அதிவேக ஒளி காட்சியுடன் தொடங்கியது.
நவம்பர் மாதத்தில் தை போவில் ஏற்பட்ட ஒரு மோசமான தீ விபத்துக்குப் பிறகு அரசாங்கம் வருடாந்திர வானவேடிக்கை நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு "நேர்மறை ஆற்றலை" பரப்புவதை நோக்கமாகக் கொண்ட மாற்று நிகழ்வை அறிமுகப்படுத்தியது.
தைவானில் 2026 ஆம் ஆண்டை வரவேற்க தைபெய் 101 கோபுரத்தின் முன் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
தைவானின் மிக உயரமான வானளாவிய கட்டிடமான தைபே 101 அருகே வாணவேடிக்கை மொத்தம் ஆறு நிமிடங்கள் நீடித்ததோடு இசை மற்றும் ஒளி நிகழ்ச்சியுடன் கலைக்கட்டியது.
தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சாவோ பிரயா நதிக்கரையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதோடு, பேங்காக்கின் பிற பகுதிகளிலும் வாணவேடிக்கைகளைப் பார்க்க மக்கள் பேரங்காடிகளிலும் ஆற்றங்கரை பகுதியிலும் கூடினர்.
ஆஸ்திரேலியா, சிட்னியின் புத்தாண்டு தின வாணவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அண்மையில் போண்டி கடற்கரை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியப் பின்னர் தொடங்கினர்.
அந்நிகழ்ச்சியில் சுற்றி கலந்து கொண்டவர்கள் யூத சமூகத்துடனும் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடனும் ஒற்றுமையின் அடையாளமாகத் தங்கள் தொலைபேசி விளக்குகளை இயக்கி இரவு வானத்தில் பிரகாசிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.
கட்டாரின் லுசைல் பௌலீவர்ட் வியாழக்கிழமைபுத்தாண்டு கொண்டாட்டத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
கொண்டாட்டத்திற்கு முன்னதாகக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்ற வேளையில் புத்தாண்டு பிறந்ததும் லுசைல் பிளாசா கோபுரங்கள் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு சிற்றரசில் நாடு முழுவதும் பல நகரங்களில் வாணவேடிக்கைகள் மற்றும் ஆளில்ல விமான காட்சிகளுடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)