பொது

அவசரமாகத் தரையிறங்கிய கடற்படை ஹெலிகாப்டர்

01/01/2026 03:10 PM

கோலாலம்பூர், ஜனவரி 01 (பெர்னாமா) -- மலாக்கா, கிளேபாங் கடற்கரை பகுதியில் நேற்றிரவு அரச மலேசிய கடற்படை, தி.எல்.டி.எம்மிற்குச் சொந்தமான Super Lynx ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியது.

இராணுவத் தரைப் படை, தி.டி.எம்மின் சிறப்பு நடவடிக்கைக் குழு ஜி.ஜி.கேவின் 60வது நிறைவு விழாவை முன்னிட்டு விமான சாகச படைப்பில் ஈடுபட்டிருந்தபோது இரவு 10.50 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தி.எல்.டி.எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தின்போது விமானத்தில் நான்கு விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு மேல் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தி.எல்.டி.எம்மின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் சீரான நிலையிலும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பிலும் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட விமானத்திற்கான மீட்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்ததோடு சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதன் மூலம் தி.எல்.டி.எம் உடனடி நடவடிக்கை எடுத்ததாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை செயல்முறை சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய இச்சம்பவம் குறித்த காணொளியைப் பரப்ப வேண்டாம் என்று தி.எல்.டி.எம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)