பொது

சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து ம.இ.கா தவறாது - சரவணன்

01/01/2026 08:23 PM

பத்துமலை, ஜனவரி 01 (பெர்னாமா) -- அரசியலைக் கடந்து சமுதாயத்திற்கு சேவை செய்யக்கூடிய கட்சியாக ம.இ.கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தற்போது இருக்கும் தலைமைத்துவத்தில் பொறுப்புகளை வகித்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்திற்கான செய்ய வேண்டிய கடமையில் இருந்து ம.இ.கா தவறாது என்று அதன் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்திருக்கின்றார்.

இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற பன்னீர் அபிஷேக விழாவில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனலில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி குறித்து கருத்துரைத்த அவர் கட்சியின் நிலைப்பாடு குறித்து மத்திய செயலவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

''நம்முடைய பணி தொடரும். குறிப்பாக, அரசாங்கத்தில் பதிவில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்திற்கு, கல்வி மற்றும் இதர துறையின் வாயிலாகவும் உதவுவதோடு கட்சியின் சேவை தொடரும். இந்திய சமுதாயத்திற்கு வழிகாட்டக்கூடிய தலைமைத்துவம் மிக அவசியம். சமுதாயத்திற்கான குரலாக ம.இ.கா எப்போதும் இருக்கும்,'' என்றார் அவர்.

அண்மையில் தேசிய முன்னணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனலில் கைக்கோர்க்க விரும்புவதாக ம.இ.கா தலைமைத்துவதில் பேச்சுவார்த்தை வலுத்து வந்தது.

தற்போது பெரிக்காத்தான் நேஷ்னலில் ஏற்பட்டிருக்கும் உட்பூசல் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)