பொது

நாடு முழுவதும் 240 இடங்களில் OPS AMBANG TAHUN BAHARU சோதனை நடவடிக்கை

01/01/2026 03:35 PM

கோலாலம்பூர், ஜனவரி 01 (பெர்னாமா) -- அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம், புலனாய்வு மற்றும் சாலை போக்குவரத்து அமலாக்கத்துறை, JSPT மூலம் நேற்றிரவு நாடு முழுவதும் 240 இடங்களில் OPS Ambang Tahun Baharu சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

மேலும், இரவு மணி 11 முதல் கோலாலம்பூரில் மட்டும் 25 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகப் புக்கிட் அமான் JSPT துணை தலைமை இயக்குநர் டி.சி.பி முஹமட் ரொஸி ஜிடின் தெரிவித்தார்.

300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் 2,000 போலீஸ் உறுப்பினர்களை உட்படுத்தி நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கை, சாலை போக்குவரத்து துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், சுற்றுச்சூழல் துறை மற்றும் நெடுஞ்சாலை குத்தகை நிறுவனம் போன்ற பல அமலாக்கத் தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

''போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல், நள்ளிரவுக்குப் பிறகுப் பொதுவாக நிகழும் சட்டவிரோத பந்தயங்களைத் தடுத்தல், மது அருந்தி அல்லது போதைப்பொருளை உட்கொண்டு வாகனத்தைச் செலுத்தும் ஓட்டுநர்களைக் கண்டறிதல் ஆகியவை இந்த நடவடிக்கையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது'', என்றார் டிசிபி முஹமட் ரொஸி ஜிடின்.

நேற்று நள்ளிரவு ஜாலான் டூத்த டோல் சாவடியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் அவ்வாறு கூறினார்.

மேலும், அதிகாலை மணி 2.45 தொடங்கி கோலாலம்பூரில் உள்ள நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட OPS Samseng Jalanan சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 378 சம்மன்கள் வெளியிடப்பட்டதோடு 800 மோட்டார்சைக்கிள்கள் சோதனையிடப்பட்டதாகக் கோலாலம்பூர் JSPT தலைவர் எசிபி முஹமட் சம்சூரி முஹமட் இசா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)