பினாங்கு, ஜனவரி 01 (பெர்னாமா) -- கடல் வழிகள் வழியாக நாட்டிற்கு அதிக அனைத்துலக சுற்றுப்பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்கான ஒரு வியூக நடவடிக்கையாக இந்த ஆண்டு முதல் சுற்றுலா கப்பல் துறையை உள்ளடக்கிய அனைத்துலக விமானம் மற்றும் சிறப்பு வாடகை மானியம், GSPC நோக்கத்தை Tourism Malaysia விரிவுபடுத்தும் என்று அதன் துணைத் தலைவர் டத்தோ யோ சூன் ஹின் தெரிவித்தார்.
''இதுவரை Tourism Malaysia விமானங்களுக்கான விமானப் பயணங்களுக்கு மானியங்களைப் பெற்றுள்ளது. ஆனால், கப்பல் பயணங்களுக்கு இல்லை. எனவே, 2026ஆம் ஆண்டில் இந்த மானியத்தின் நோக்கத்தைக் கப்பல் பயணங்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்துவோம். இதனால் மலேசியாவிற்குக் கப்பல்களை வாடகைக்கு எடுக்க விரும்பும் கப்பல் தொழில்முனைவோர் நடவடிக்கை பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லது பயண முகவர்களுக்கு மானியங்களை வழங்க முடியும்'', என்றார் டத்தோ யோ சூன் ஹின்.
விமானப் போக்குவரத்து மற்றும் பயணக் கப்பல் துறைகளை ஆதரிப்பதற்காக மொத்த மானிய ஒதுக்கீடு ஐந்து கோடி ரிங்கிட் என்றும் ஆனால் பயணக் கப்பல் துறைக்குக் குறிப்பிட்ட பிரிவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு இன்று பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள Swettenham Pier Cruise முனையத்தில் நடைபெற்ற பயணக் கப்பல் சுற்றுலா வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இதனிடையே 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு இயற்கை அழகு கலாச்சார செழுமை மற்றும் தனித்துவத்தைக் காண 70 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுப்பயணிகள் கெடாவிற்கு வருகைப் புரிவார்கள் என்று அம்மாநில அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், லங்காவி அல்லது கெடா மாநிலத்தில் சுற்றுப்பயணிகளைக் கவர மாநில அரசாங்கம் சுற்றுலா இடங்களை ஏற்படுத்திருப்பதாகக் கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சோவாகிர் அப்துல் கானி தெரிவித்தார்.
''லங்காவியைத் தவிர கெடாவில் உள்ள பிரதான நிலப்பகுதியில் சுற்றுப்பயணிகள் வந்து பார்க்கக்கூடிய பல இடங்கள் உள்ளன. நமது வயல்களின் நிலை, நமது ஆறுகள், நமது கிராம கலாச்சாரம் போன்றவை அடங்கும். மலேசியாவிற்குக், குறிப்பாகக் கெடாவிற்கு அதிகமான சுற்றுப்பயணிகளைக் கவருவதற்கான எங்கள் முயற்சிகளை அதிகரிக்க கெடா மாநில அரசு மத்திய அரசுடன் சிறப்பாகச் செயல்படும்'', என்றார் சோவாகிர் அப்துல் கானி.
கடந்த ஆண்டில் கெடா மாநிலத்திற்குச் சுமார் 70 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை புரிந்தது அம்மாநிலத்தில் சுற்றுப்பயணிகளைக் கவரும் ஆற்றல் இருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.
அதேவேளையில் 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு மற்றும் VJY2026 எனப்படும் 2026 ஜோகூருக்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரங்களுக்காக 100க்கும் மேற்பட்ட சுற்றுலாத் திட்டங்கள் உட்பட நிகழ்ச்சிகளை ஜோகூர் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்யவிருப்பதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முஹமட் ஜஃப்னி முஹமட் ஷுக்கோர் தெரிவித்தார்.
''2026ஆம் ஆண்டிற்கான கவனத்தைக் கவரக்கூடிய இடங்கள் ஆண்டின் தொடக்கம் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் தொடங்கப்பட்டுள்ளதோடு இன்னும் சில தொடங்கப்படவும் உள்ளன. மூத்த தலைவர்கள் அருங்காட்சியகம், கோத்தா திங்கியில் உள்ள சுங்கை லெபம் பொழுதுபோக்கு மையம், கம்போங் சுங்கை மேலாயு சதுப்புநில சூழல் சுற்றுலா, ரிவர் குரூஸ் சுங்கை ஜோகூர், டாங்கா பே பொழுதுபோக்கு மையம் இவ்வாண்டின் மத்தியில். பெங்கராங்கில் உள்ள கோத்தா திங்கி மாவட்ட கலாச்சார மையம்'', என்றார் டத்தோ முஹமட் ஜஃப்னி முஹமட் ஷுக்கோர்.
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் ஜோகூர் முழுவதும் இரண்டிலிருந்து மூன்று மடங்கு பெரியளவிலான நிகழ்ச்சிகள், விளையாட்டு, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளதாக முஹமட் ஜஃப்னி விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)