ஜோகூர் பாரு, ஜனவரி 02 (பெர்னாமா) -- கடந்தாண்டு டிசம்பர் 22-ஆம் தேதி, தனது கணவரைக் கொலை செய்ய முயன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, பெண் ஒருவரும் வேலையில்லா ஆடவர் ஒருவரும், இன்று ஜோகூர் பாரு ஷெக்ஷன் நீதிமன்றத்தில் மறுத்தனர்.
நீதிபதி முஹமட் ஸாமீர் சுஹாய்மீ முன்னிலையில், ஒரே நேரத்தில் அக்குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், என். ஏகவல்லியும், அவரது ஆண் நண்பரான ஆர். கமல சர்னாவும் அதை மறுத்து விசாரணைக் கோரினர்.
ஜோகூர் பாரு, தாமான் ஏசான்-னில் உள்ள வீடொன்றில் ஜி. குமரேசன் என்பவரின் முகத்தில் தலையணையைக் கொண்டு அழுத்தி அவரை உயிரிழக்கச் செய்ய முயன்றதாக அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 307 மற்றும் 34-இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவ்விருவருக்கும், பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
தலா 20,000 ரிங்கிட் அபராதம் மற்றும் தனிநபர் உத்தரவாததின் பேரில் அவர்களை விடுவிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆவணங்களை ஒப்படைப்பதற்காக, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)