கோலாலம்பூர், ஜனவரி 05 (பெர்னாமா) -- நாளை தொடங்கி ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மலேசிய பொது பூப்பந்து போட்டியில் தேசிய இரட்டையர் பூப்பந்து வீராங்கனைப் பேர்லி தான் உலகத் தரம் வாய்ந்த சூப்பர் 1000 வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றுவதைப் பெரிய இலக்காகக் கொண்டுள்ளார்.
கடந்த பருவம் முழுவதும் தாய்லாந்து மற்றும் ஆர்டிக் பொது பூப்பந்து போட்டியுடன் ஜப்பான் மாஸ்டர்ஸ் ஆகியவற்றில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்துள்ள தன்னம்பிக்கை இவ்வாண்டு தொடரில் சவால் அளிக்க தங்களுக்கு உதவும் என பேர்லி நம்பிக்கை தெரிவித்தார்.
''நாங்கள் இதே வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம். நான் முன்னதாகக் கூறியது போல ஆட்டத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இம்முறை அதிக ஏற்ற இறக்கங்கள் இன்றி எங்களது ஆட்டத் திறனைத் சீராகப் பராமரித்து இன்னும் சிறப்பாக மேம்படுத்த முடியும் என்று நம்புகிறோம்'' என்றார் பெர்லி தான்.
இதனிடையே இந்திய ஜோடியுடன் மோதவிருக்கும் முதல் சுற்று ஆட்டமே தான் எதிர்கொள்ள வேண்டிய ஆரம்பக்கால சவால்களில் ஒன்று என பெர்லி ஒப்புக்கொண்டார்.
ருதுபர்ணா பாண்டா-சுவேதா பாண்டா ஜோடியை இதற்கு முன் ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும் இவ்வாட்டத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாகக், கடந்த நாட்களில் சொந்த மண்ணில் தங்களது அடைவுநிலை திருப்திகரமாக இல்லாததைக் கருத்தில் கொண்டு இம்முறை கூடுதல் கவனத்துடன் விளையாட விரும்புவதாகவும் பேர்லி குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)