| BREAKING NEWS | Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | |
நெகிரி செம்பிலான், ஜனவரி 09 (பெர்னாமா) -- கடந்தாண்டு டிசம்பரில், நீலாய், டேசா, டேசா பால்மா-வில் சுயமாக தயாரித்த வெடிபொருள், ஈ.ஐ.டி-ஐ பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை 63 வயதான முதியவர் ஒருவர், இன்று சிரம்பான், துவான்கு ஜாஃபார் மருத்துவமனையில் மறுத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட அந்நபர் இன்னும் சிகிச்சை பெற்றுப் வருவதால், நோயாளி அறையில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் யோ ஹோக் சுன், அக்குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி, நண்பகல் மணி 12.30 அளவில், நீலாய், டேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்பில், காயம் ஏற்படுத்தும் நோக்கில், நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், வெடிபொருட்களை வைத்திருந்ததாக யோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதே நாளில், இரவு மணி 7.30-க்கு நீலாய், ஸ்டார் வேலீ வாகன நிறுத்துமிடத்தில் புரோட்டான் வீரா ரக காரில் வெடிபொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், டிசம்பர் 27-ஆம் தேதி, மாலை மணி 4.15 அளவில், மந்தின், கம்போங் பாதாங் பெனாரில் உள்ள பிரதான சாலையின் ஓரத்திலும், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த வெடிப்பொருட்களைப் பயன்படுத்தி சேதம் விளைவிக்கும் நோக்கில், அக்குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தில் இருந்த கார் ஒன்றுக்கு சேதம் விளைவித்தது மற்றொரு குற்றச்சாட்டாகும்.
அதோடு, சேதம் விளைவிக்கும் தீய நோக்கத்தில், வெடிப் பொருட்களைத் தயாரித்ததாகவும் யோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1958-ஆம் ஆண்டு அரிக்கும் மற்றும் வெடி பொருள்கள் மற்றும் ஆபத்தான ஆயுதச் சட்டம், செக்ஷன் 4 மற்றும் செக்ஷன் 3-இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று முதல் 7 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.
பொது வாகனத்திற்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு வெடிபொருள்களைப் பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் செக்ஷன் 435-இன் கீழ், 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
ஜாமின் வழங்கப்படாத நிலையில், இவ்வழக்கு பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)