திரெங்கானு, ஜனவரி 09 (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், சுல்தான் ஸய்னால் அபிடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக, ஹொன்டா ஜேஸ் ரக வாகன ஓட்டுநருக்கு, இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, கோலா திரெங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 32 வயதான அந்த ஆடவருக்கு, மூத்த துணை நீதிமன்றப் பதிவாளர், யுஹானிஸ் முஹமட் ரொஸ்லான் அத்தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
கைது செய்யப்பட்ட அச்சந்தேக நபர், இன்று காலை மணி 9,45 அளவில், போலீஸ் பாதுகாப்புடன், கோலா திரெங்கானு நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார்.
கடந்த திங்கட்கிழமை, பிற்பகல் மணி 1.55 அளவில், அவர் செலுத்திய பெரொடுவா வீவா ரக காரை எதிர் திசையில் பயணித்த ஹொன்டா ஜேஸ் ரக வாகனத்துடன் மோதியதில், கல்வியியலில் முதுகலை பயிலும் இரண்டாம் தவணை மாணவியான, 25 வயது, ஷாகிரா ஹனான் மஸ்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஹொன்டா ஜேஸ் வாகன ஓட்டுநர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்தாண்டு ஜனவரி முதல் சுல்தானா நுர் ஸஹிரா மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பெற்று வருவதாகவும், கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அஸ்லி முஹம்ட் நோர் கூறினார்.
மேலும், விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, சந்தேக நபர் ஹொன்டா சிட்டி கார் ஒன்றை உடைத்து சுமார் 200 ரிங்கிட் பணத்தை திருடியதாகவும் நம்பப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதுடன் மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)