பொது

மித்ரா வழங்கும் நிதியை வெளிப்படையுடன் நிர்வகிப்பீர் - எஸ்.பி.ஆர்.எம்

09/01/2026 04:32 PM

புத்ராஜெயா, 09 ஜனவரி (பெர்னாமா) -- இந்திய சமுதாயத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் இந்திய உருமாற்று பிரிவான மித்ரா மூலம் அரசாங்கம் வழங்கும் நிதியை வெளிப்படையாகவும் சட்டப்படி முறையாகவும் நிர்வகிக்கும் வழிகாட்டுதலை விளக்கும் கருத்தரங்கு ஒன்று, இன்று புத்ராஜெயாவில் நடத்தப்பட்டது. 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் உடன், மித்ரா முதன்முறையாக இணைந்து நடத்திய இக்கருத்தரங்கு போலி ஆவணங்களின் மூலம் நிதியைப் பெற முயற்சிக்கும் தரப்பினருக்கான எச்சரிக்கையாகவும் அமைந்தது. 

மித்ரா நிதியைப் பெறும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பொறுப்புணர்வை வளர்க்கும் நடைமுறைகள் குறித்தும் இக்கருத்தரங்கில் விவரிக்கப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் பிரபாகரன் கணபதி தெரிவித்தார். 

''முழுமையான விளக்கத்தையும் விழிப்புணர்வையும் கொடுக்கும் வகையில் முதன்முறையாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மானியத்தை விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெளிவான விளக்கமளித்தோம்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, மித்ராவில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் உள்விவகார சர்ச்சைக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் அதற்கு முன்னெடுக்கப்பட்ட தீர்வுக் குறித்தும் பிரபாகரனிடன் வினவப்பட்டது. 
 
''நமக்கென்று சில வழிகாட்டல் உள்ளன. அது தெளிவானது; வெளிப்படைத்தன்மைக் கொண்டது. முதலில் பிரதமர் துறையிடம் சமர்ப்பித்து அதன் ஒப்புதலைப் பெற்ற பின்னரே நிதியை விநியோகிப்போம். படிப்படியான செயல்முறைகள் உள்ளன. மானியத்தைக் கொடுக்கும்போது சீராகவே கொடுக்கிறோம். அதனைப் பெற்றவர்கள் அம்மானியத்தைப் பயன்படுத்தும் செயல்முறையில் தான் சில நேரம் சிக்கல் உண்டாகிறது,'' என்றார் அவர்.

இதனிடையே, மித்ராவிடமிருந்து நிதியைப் பெற்றப் பின்னர், அதனை அவர்களின் அமைப்புகளுக்கு பயன்படுத்துவதை விடுத்து, சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது ஒரு குற்றச்செயலாக வகைப்படுத்தப்படும் என்றும், தகுந்த ஆதாரங்களுடன் அவர்களின் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும், இக்கருத்தரங்கின் பேச்சாளரான, பினாங்கு மாநில எஸ்.பி.ஆர்.எம் இயக்குநர் டத்தோ கருணாநிதி Y. சுப்பையா தெளிவுப்படுத்தினார். 

''மானியத்தை விண்ணப்பிக்கும்போதே தவறு நிகழ்கிறது. போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கிறார்கள். அதோடு, ஒரு நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அதற்கான செலவை மேற்கொண்டதாகவும் பொய்க்கணக்கு காட்டுகிறார்கள். இவை அனைத்தும் சட்டப்படி குற்றமாகும்,'' என்றார் அவர்.

அதோடு, சில சந்தர்ப்பங்களில் மித்ரா வழங்கும் மானியங்களைப் பெறும் நோக்கத்துடன் உயர்க்கல்வி மாணவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி அந்நிதியைப் பெற முயற்சிப்பதாகவும், இது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் டத்தோ கருணாநிதி எச்சரித்தார். 

''உயர்க்கல்விக்கழக மாணவர்கள் போலி ஆவணங்களின் மூலம் நிதியை விண்ணப்பிக்கிறார்கள். அது மிகப் பெரிய குற்றம். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்,'' என்று அவர் எச்சரித்தார்.

இதுபோன்ற செயல்கள் அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையையே பாதிக்கும் அளவிற்கு ஆபத்தானது எனவும் அவர் அறிவுறுத்தினார். 

மேலும், நிதி முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அது குறித்து சட்டப்படி புகார் அளிப்பவர்கள் அல்லது அது தொடர்பிலான தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தகவல் வழங்குபவர் பாதுகாப்பு சட்டம் உட்பட சாட்சியாளர் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் இருப்பதால் பொதுமக்கள் முன்வந்து புகாரளிக்குமாறு கருணாநிதி வலியுறுத்தினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]