பொது

மலேசியா-துருக்கி உறவு; உலகளாவிய ஈடுபாட்டில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவுகிறது 

10/01/2026 02:57 PM

துருக்கி, ஜனவரி 10 (பெர்னாமா) -- மலேசியா - துருக்கியின் நெருங்கிய உறவுகள் தலைவர்களுக்கு இடையிலான  நீண்டகால நம்பிக்கையால் வலுப்படுத்தப்பட்டு வர்த்தகம், முதலீடு மற்றும் உலகளாவிய ஈடுபாட்டில் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த உதவுகின்றன.

பல ஆண்டுகளாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த உறவு, தலைமைத்துவ அளவில் நெருக்கமான ஈடுபாட்டையும் புரிதலையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவ்விரு நாடுகளும் முதன்மை பொருளாதார மற்றும் அரச தந்திர முயற்சிகளில் மிகவும் திறம்பட இணைந்து செயல்பட முடிவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"இத்தனை ஆண்டுகளாக சோதனைகள் மற்றும் இன்னல்களின் போதும், உயர்வு தாழ்வின்போதும் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். அவர் ஒரு உண்மையான நண்பராகவே இருந்தார்,'' என்றார் அவர்.

அண்மையில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டபோது, துருக்கியின் பொது ஒளிபரப்பு நிறுவனத்தின் ​​One on One TRT World நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் டத்தோ ஶ்ரீ அன்வார், இவ்வாறு கூறினார்.

மலேசியாவுக்கும் துருகிக்கும் இடையிலான நீண்டகால இருவழி உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan-னின் அழைப்பை ஏற்று, பிரதமர் செவ்வாய்க்கிழமை தொடங்கி அந்நாட்டிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)