கோலாலம்பூர், 10 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை தமது வீட்டில் விழுந்ததால் ஏற்பட்ட இடுப்பு எலும்பு முறிவை குணப்படுத்துவதற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தேசிய இருதய சிகிச்சைக் கழகமான, ஐ.ஜே.என்-னில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐ.ஜே.என் மருத்துவமனை வேந்தர், துங்கு முரிஸ் மற்றும் கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி துன் மகாதீருக்கு அறுவை சிகிச்சையின்றி Fisioterapi எனும் உடலியக்க மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதே சிறந்த வழி என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அவரின் ஊடக செயலாளர் சுஃபி யூசோப் தெரிவித்தார்.
துன் டாக்டர் மகாதீரின் வயதைக் கருத்தில் கொள்கையில், எலும்பு முறிவிலிருந்து அவர் முழுமையாக குணமடைவதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுஃபி கூறினார்.
நெருங்கிய குடும்ப உறவுகளைத் தவிர்த்து பொதுமக்கள் துன் மகாதீரைக் காண்பதற்கு தற்போது வரை அனுமதி மறுக்கப்படுகின்றது.
நூறு வயதுடைய நாட்டின் மூத்த அரசியல் தலைவரான துன் மகாதீர், கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஶ்ரீ கென்பாங்கான் தி மைன்ஸில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததை அடுத்து, ஐ.ஜே.என்-னில் அனுமதிக்கப்பட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)