பொது

பகடிவதை எதிர்ப்பு சட்டத்தில் கையெழுத்திட மாமன்னர் ஒப்புதல்

10/01/2026 05:12 PM

கோலாலம்பூர், 10 ஜனவரி (பெர்னாமா) --  2026-ஆம் ஆண்டு பகடிவதை எதிர்ப்பு சட்டத்தில் கையெழுத்திட மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புக் கொண்டார்.

பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை உருவாக்கும் நோக்கில், கடந்தாண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அச்சட்டம் நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக, அவர் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பகடிவதை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களில் ஏற்படும் பகடிவதை குற்றங்களை நிர்வகிக்கவும் ஒழுங்கமைக்கவும் கல்வி, தற்காப்பு, உள்துறை, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாமன்னர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கும் புகார்களை விசாரிக்கவும், தீர்மானிக்கவும் ஒரு சிறப்பு பகடிவதை எதிர்ப்பு நடுவர் மன்றம் நிறுவப்படும் என்றும் மாமன்னர் கூறினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் நீதி வழங்கும் நோக்கில் முறையான இழப்பீடு அல்லது தீர்ப்பை வழங்க நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக, அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)