பொது

ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தி.யு.டி.எம் கடுமையான நடவடிக்கை

10/01/2026 05:21 PM

கோலாலம்பூர், 10 ஜனவரி (பெர்னாமா) -- ஒழுக்கக்கேடான செயல்களில் நேரடியாக ஈடுபட்ட 20 அதிகாரிகள் மீதும் அரச மலேசிய ஆகாயப்படை, தி.யு.டி.எம் கடுமையான மற்றும் சமரசமற்ற நடவடிக்கை எடுக்கும்.

மலேசிய ராணுவப்படை, ஏ.டி.எம்-இன் விதிமுறைகள் மற்றும் சட்ட விதிகளின்படி, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படுவதை தி.யு.டி.எம் உறுதி செய்யும் என்று ஆகாயப்படை தளபதி ஜெனரல் டத்தோ ஶ்ரீ முஹமட் நோரஸ்லான் அரிஸ் கூறினார்.

20 தி.யு.டி.எம் அதிகாரிகளும் நேரடியாக ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

எந்தவொரு உத்தரவு, அதிகாரப்பூர்வ கட்டளை மற்றும் விதிமுறையை மீறுவதை தி.யு.டி.எம் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர் அத்தகைய ஆரோக்கியமற்ற கலாச்சாரம் தி.யு.டி.எம்-இன் நடைமுறை அல்ல என்று வலியுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து தி.யு.டி.எம் தலைமைத்துவம் வருத்தம் தெரிவித்ததாகவும், உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஹமட் நோரஸ்லான் கூறினார்.

இராணுவ முகாம்களில், வெளி நபர்களின் நுழைவு மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் இருப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், சமூக ஊடகங்களில் பரலாகப் பகிரப்பட்டு வரும் வேளையில், அதன் தொடர்பில் உள் விசாரணை நடத்த தற்காப்பு அமைச்சு, மின்டெஃப் கடந்த திங்கட்கிழமை ஏ.டி.எம்-க்கு உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)