விளையாட்டு

2026 ஆசியான் கிண்ணம்; தேசிய அணிக்கு முக்கிய வாய்ப்பாகும்

16/01/2026 06:37 PM

கோலாலம்பூர், 16 ஜனவரி (பெர்னாமா) --  2026 Hyundai ஆசியான் கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா பங்கேற்பது, தேசிய அணியின் வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்பை உருவாக்கும் என்று அணியின் தலைமைப் பயிற்றுநர் பீட்டர் சக்லமோவ்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.

முக்கிய அனைத்துலக போட்டிகளை முன்னிட்டு அணியின் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் கூடுதல் நன்மையையும் இந்த வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.

ஆசியான் கிண்ண போட்டி மலேசிய ஆட்டக்காரர்களுக்கு அதிக அனுபவத்தை வழங்கும் என்று பீட்டர் சக்லமோவ்ஸ்கி குறிப்பிட்டார்.

மேலும், மலேசியாவில் நடைபெறவுள்ள 2027 சீ விளையாட்டு போட்டி உட்பட எதிர்வரும் முக்கிய போட்டிகளுக்கான தயாரிப்பிலும் இது முக்கிய பங்காற்றும் என்றார் அவர்.

ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெறவுள்ள இப்போட்டிக்கான குலுக்கலில் ஏழு முறை வெற்றியாளரான தாய்லாந்துடன் மலேசியா B குழுவில் இடம் பெற்றுள்ளது.

2024-ஆம் ஆண்டு, பேங்காக் ராஜமங்கலா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் தாய்லாந்திடம் 0–1 என்று தோல்வி கண்ட மலேசியாவுக்கு, அந்நாட்டை தோற்கடிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)