கோலாலம்பூர், பிப்ரவரி 13 (பெர்னாமா) -- பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின்இன்று முதல் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்.
பெர்சத்து அரசியலமைப்பு பிரிவு 22.5-இன் கீழ் ஹம்சாவின் கட்சி உறுப்பினருக்கான அனைத்து உரிமைகளும் நீக்கப்படுவதாக ஒழுங்குமுறை வாரியம் முடிவு செய்ததாக கட்சியின் உயர்மட்ட தலைமைத்துவ மன்றத்திடம் தெரிவிக்கப்பட்டதாக பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Larut நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடினின் நடவடிக்கைகள் கட்சி அரசியலமைப்பின் பிரிவு 9.1.4-ஐ மீறியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்மின் அலி கூறினார்.
2024 அக்டோபரில் எந்த தரப்பினரும் ஹம்சாவை எதிர்த்துப் போட்டியிடாததால் 2024 முதல் 2027-ஆம் ஆண்டுக்கான பெர்சத்து துணைத் தலைவராக அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
இதனிடையே, ஹம்சாவின் உறுப்பினர் பதவி நீக்கம் குறித்து, கட்சியின் ஒழுங்குமுறை வாரியத் தலைவர் டத்தோ முஹமட் ரட்சி மனான் கையொப்பமிட்டிருந்த அறிவிக்கையும் இன்று அவருக்கு அனுப்பப்பட்டுவிட்டது.
இருப்பினும், அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குள் ஹம்சா சைனுடின் மேல்முறையீட்டு வாரியத்திடம், இம்முடிவை பரிசீலிப்பதற்கான மேல்முறையீட்டை சமர்ப்பிக்கலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)