பொது

முன்னாள் மூத்த அமைச்சர் மீது ஊழல் புகார்; எஸ்.பி.ஆர்.எம். விசாரணை

13/02/2026 06:25 PM

கெந்திங் மலை, பிப்ரவரி 13 (பெர்னாமா) --  முன்னாள் மூத்த அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 111 கோடி ரிங்கிட் முதலீட்டு முறைகேடுகள் தொடர்பாக மூன்று அரசு சாரா நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பாக நேற்று புகாரைப் பெற்ற நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து தமது தரப்பு  தற்போது மதிப்பாய்வு செய்து வருவதாக எஸ்.பி.ஆர்.எம்-இன் நடவடிக்கை பிரிவு துணை தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி தெரிவித்தார்.

"எங்களுக்கு உட்பட்ட சட்டத்தின் கீழ் நாங்கள் விசாரணை செய்வோம். பெறப்பட்ட ஆவணங்களை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம். பெறப்பட்ட புகார் அடிப்படையில், ஏதேனும் ஊழல் குற்றங்கள், அதிகார மீறல், பராமரிப்பு குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை நாங்கள் விசாரிப்போம். மேலும் நிர்வாக அம்சத்தையும் நாங்கள் கவனிப்போம்.," என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை, ஊழலை எதிர்த்துப் போராடுவதில் எஸ்.பி.ஆர்.எம்-இன் பங்கு எனும் தலைப்பில் பகாங், கெந்திங் மலையில் ஊடகவியளார்களுக்கு நடத்தப்பட்ட பட்டறையை நிறைவு செய்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் முதலீட்டு முறைகேடுகள் தொடர்பாக அரசு சாரா நிறுவனம் ஒன்று வழங்கிய ஆவணங்களை எஸ்.பி.ஆர்.எம் பெற்றதாக நேற்று செய்திகள் வெளியிடப்பட்டன.

அந்த ஆவணங்கள் அடிப்படையில், முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவரும் அமைச்சு அதிகாரி ஒருவரும் ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)