உலகம்

பெர்லின் திரைப்பட விழாவிலிருந்து விலகுவதாக இந்திய நாவலாசிரியர் அருந்ததி ராய் அறிவிப்பு

14/02/2026 02:49 PM

இந்தியா, 14 பிப்ரவரி (பெர்னாமா) -- திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக அரசியல் கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று விழா நடுவர் மன்றத் தலைவர் கூறியதைத் தொடர்ந்து, பெர்லின் திரைப்பட விழாவில் இருந்து தாம் விலகுவதாக இந்திய நாவலாசிரியர் அருந்ததி ராய் அறிவித்துள்ளார்.

1997ஆம் ஆண்டு 'The God of Small Things' நாவலுக்காக Booker பரிசை வென்றதன் வழி உலகளவில் அறியப்பட்ட அருந்ததி ராய், நடுவர் மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களால் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்ததாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அரசியல் கொள்கையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அர்ப்பணிப்புடன் அரசியல் சார்ந்த திரைப்படங்களை எடுத்தால் அரசியலுக்கு எதிரானவர்களாக தங்களை வர்ணிப்பதாக அனைத்துலக நடுவர் குழுத் தலைவரான Wim Wenders கூறியுள்ளார்.

இத்தகைய கருத்துகள் மனசாட்சிக்கு புறம்பானவை என்று புகார் கூறிய Roy, கலை, அரசியலாக இருக்கக்கூடாது என்று அவர்கள் சாடியிருப்பதும் வேதனை அளிப்பதாக, இந்திய இதழான The Wire-க்கு வழங்கிய செய்தியில் கூறியிருந்தார்.

மனிதாபிமானத்திற்கு எதிரான ஒரு குற்றத்தை நேரடியாக காணும்போது, அதைப் பற்றிய கருத்துகளை, கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் எவ்வித ஆட்சேபனையும் இன்றி வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன ஆதரவாளர்களால் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்பட்டு வரும் பெர்லின் திரைப்பட விழா, வெனிஸ் மற்றும் கான்ஸ் போன்ற பிற விழாக்களைவிட அரசியல் விழிப்புணர்வு அதிகமானதாக கருதப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)