கோலாலம்பூர், பிப்ரவரி 14 (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் தலைமை ஆணையர், டான் ஶ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை ஜே.எஸ்.ஜே-இன், சட்ட வழக்குப் பிரிவின் கீழ் உள்ள, புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளவிருக்கிறது.
ஒரு நிறுவனத்தில் அசாம் பாக்கி பங்குகளை வைத்திருப்பதாக, அனைத்துலக ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருப்பது தொடர்பில், வெள்ளிக்கிழமை போலீசாருக்கு புகார் கிடைத்ததை தொடர்ந்து, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம் குமார் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
அந்த அனைத்துலக ஊடகம், பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிட்ட ஒரு கட்டுரை குறித்து, தங்கள் தரப்பு விசாரணை நடத்தி வருவதாகவும், அதில் அசாம் பாக்கிக்கு எதிராக அவதூறான அறிக்கைகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் டத்தோ குமார் தெரிவித்தார்.
அவதூறு காரணத்திற்காக குற்றவியல் சட்டம் செக்ஷன் 500, இணைய வசதிகள் அல்லது சேவைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், இந்நாட்டில் குற்றவியல் நீதியின் கொள்கைகளை மதிக்கும் வகையில், போலீசார் விசாரணை நிறைவு செய்யும் வரை, வழக்கு தொடர்பாக பொதுமக்கள் எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று குமார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)