புத்ராஜெயா, 19 பிப்ரவரி (பெர்னாமா) -- வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான விவகாரங்கள் உட்பட சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல் எனும் கொள்கையை தொடர்ந்து நிலைநிறுத்தும் நாடாக மலேசியா விளங்குகிறது.
நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் பேணுவதை உறுதி செய்ய சட்ட அமலாக்கத்தில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்யாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக கூறினார்.
வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானம் மற்றும் நிலம் தொடர்பான உணர்வுப்பூர்வமான பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்த டத்தோ ஶ்ரீ அன்வார், முழு ஒழுக்கத்துடனும் அமலாக்க அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் நாட்டில் மத சுதந்திரம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கினார்.
"சகோதர சகோதரிகளே, உங்கள் தலைமைத்துவ நிலை எதுவாக இருந்தாலும், இந்த நாடு சட்டத்தின் நாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சி. நான் முன்பு சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தேன். ஆனால், மக்கள் அதனை விமர்சிக்க விரும்பினால், அவர்கள் வழியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று அர்த்தம். விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சமயத்தைப் பின்பற்றுங்கள். ஆனால், விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதை மட்டும்தான் நாங்கள் கேட்கின்றோம்", என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சின் Ihya' Ramadan நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் குறிவைத்து அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, இஸ்லாமிய கழகங்கள் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)