பொது

21 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய மின் கழிவுகளை கடத்தும் முயற்சி முறியடிப்பு

19/02/2026 03:38 PM

போர்ட் கிள்ளான், 19 பிப்ரவரி (பெர்னாமா) --  வெளிநாட்டிலிருந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய மின்னணு கழிவுகள் அல்லது மின் கழிவுகளை கடத்தும் முயற்சியை பகாங் மாநில அரச மலேசிய சுங்கத் துறை, ஜே.கே.டி.எம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

பிப்ரவரி 3-ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள கிள்ளான் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 40 அடி நீளமுள்ள எட்டு கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பகாங் மாநில சுங்க இயக்குநர் முஹமட் அஸ்ரி செமான் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை, ஜே.ஏ.எஸ்-இன் ஒத்துழைப்புடன் பெந்தோங் ஜே.கே.டி.எம் அமலாக்கப் பிரிவின் நடவடிக்கைக் குழு, இந்த பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

வடக்கு துறைமுகத்தில் காலை மணி 11 அளவில் நடத்தப்பட்ட அந்தப் பரிசோதனையில் சம்பந்தப்பட்ட மின்னணு கழிவுப் பொருட்கள் 186 ஆயிரம் கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ளது கண்டறியப்பட்டது.

இன்று, சிலாங்கூர், வடக்கு துறைமுகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கொள்கலன்களில் ஐந்து கனடாவிலிருந்தும், இரண்டு ஸ்பெயின், மேலும் ஒன்று குரோஷியா ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் செக்‌ஷன் 135(1)(a) இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)